Breaking News
மனைவியை கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவு: சிறு தவறால் போலீஸிடம் சிக்கிய கணவர்

நான் வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருந்தால், என்னை யாராவது அடையாளம் கண்டிருப்பார்கள். அதனால் காவல் துறையினரிடம் நான் பிடிபட்டிருக்கலாம். அதனால்தான் நான் வெளியுலகை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒரு உணவு விடுதியின் கொல்லைப்புறத்திலேயே தங்கினேன். பத்து ஆண்டுகளாக இப்படிதான் நாட்களை கடத்தி வந்தேன். ஆனால் இப்போது காவல் துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்’ என்கிறார் பீம்சிங் பட்டேல்.

பீம்சிங் பட்டேல் தனது குற்றத்தை ஒத்துக்கொண்ட பிறகு, ஆமதாபாத் குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள காவல் துறையினரின் அனுமதியுடன் பிபிசி செய்தியாளர், பீம்சிங் பட்டேலிடம் பேசினார்.

மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் தால்கி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த பீம்சிங் பட்டேல். ஆனால் அங்கு சரியான முறையில் விவசாய வேலைகள் இல்லாததால் அவர் ஆமதாபாத்தின் அம்ரைவாடி பகுதிக்கு கூலி வேலைக்காக வந்தார்.

கூலி வேலைக்காக ஆமதாபாத்திற்கு வந்த பீம்சிங் எதற்காக அவரது மனைவியை கொலை செய்தார்? கொலைக்கு பின் பத்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த பீம்சிங், திடீரெனெ காவல் துறையினரிடம் சிக்கியது எப்படி?

சந்தேகம் தீவிரமானதால் சம்பவம்

பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய பீம்சிங், “ஆமதாபாத் வந்த புதிதில் நான் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தேன். அதற்கு பின் சொந்தமாக டீ கடை வைத்து நடத்தி வந்தேன்.எங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனியே வசித்து வந்தனர். என்னுடைய மனைவி டாப்ரிக்கு 45 வயது. நான் வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும்போதெல்லாம் அவள் வீட்டிலேயே இருக்க மாட்டாள். எப்போதும் யாரிடமாவது போன் பேசிக்கொண்டோ, எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டோ இருப்பாள். நிறைய புது துணிகள் வாங்குவாள், அடிக்கடி சினிமாவுக்கு சென்று வந்தாள்,” என்று கூறினார்.

மேலும், “என் மனைவியின் இப்படியான நடவடிக்கைகள் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் என்னிடம் சில விஷயங்களை கூறினர். இதுகுறித்து எனது மனைவியிடம் நேரடியாக பேசியபோது அவளிடமிருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை,” என்கிறார்.

தன் மனைவியிடம் இந்த பிரச்னை குறித்து பேச துவங்கிய பின்பு தங்களுக்கிடையில் நிறைய சண்டைகள் வந்ததாக குறிப்பிடுகிறார் பீம்சிங்.

கொலை, மத்தியபிரதேஷ்

பட மூலாதாரம்,BHARGHAV PARIKH

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்த மாதிரியான நடவடிக்கைகளை நிறுத்திவிடுமாறு நான் அவளிடம் கூறினேன். இல்லையென்றால் நம் இருவரில் ஒருவர் உயிர் விட வேண்டும் என எச்சரித்தேன். ஆனாலும் தொடர்ந்து இது தொடர்பான சண்டைகள் எங்களுக்கிடையில் வந்து கொண்டே இருந்தது. எனக்கு இன்னும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அது ஒரு சனிக்கிழமை. எனக்கு ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் என் மனைவி சைக்கிள் ரிக்‌ஷாவில் எங்கோ செல்கிறார் என்று கூறினார். நான் உடனடியாக கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றேன்.

வீட்டில் அங்கு யாரும் இல்லை. அவள் வரும் வரைக்கும் காத்திருந்தேன். அவள் வீட்டிற்கு வந்தபின் எங்கே சென்றிருந்தாய் என்று கேட்டேன். எங்களுக்கிடையில் துவங்கிய வாக்குவாதம் சண்டையாக மாறியது. நான் கோபத்தில் வீட்டில் இருந்த ஒரு கட்டையை எடுத்து அவள் தலையில் அடித்து விட்டேன். அவள் உடல் முழுவதும் ரத்தம் சொட்ட துவங்கியது. ஆனால் நான் அதை துடைத்து விட்டேன்” என்று கொலை செய்த சம்பவம் குறித்து மிரட்சியுடன் விவரிக்கிறார் பீம்சிங்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் கொலை செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எனவே அங்கிருந்து தப்பித்து ஓட முடிவு செய்தேன். அதற்காக முதலில் நான் எனது மொபைல் போனையும், சிம் கார்டையும் உடைத்து போட்டேன். பின் காவல் துறையினரிடம் பிடிபடாமல் இருக்க அங்கிருந்து ரிக்‌ஷா மூலம் நடியாட் வரை சென்றேன். பின் அங்கிருந்து பல்வேறு வாகனங்களில் பயணித்து மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதிக்கு வந்தடைந்தேன்” என்கிறார் பீம் சிங்.

கொலைக்கு பின்னர் காவல் துறையினரிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள பல தந்திரங்களை பின்பற்றி வந்துள்ளார் பீம்சிங்.

இது குறித்து பீம்சிங் பேசும்போது, “நான் ஓட்டல்களில் பாத்திரங்களை கழுவும் பணியில் ஈடுபட்டு வந்தேன். காரணத்துடன் தான் நான் அந்த வேலையை தேர்ந்தெடுத்தேன். நான் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்திருந்தால் யாராவது என்னை அடையாளம் கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்திருப்பர். அப்படி எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காகதான் நான் இந்த வேலையை செய்து வந்தேன்” என்கிறார்.

ஆனால் எவ்வளவு காலம்தான் இந்தூர் பகுதியிலேயே தலைமறைவாக இருக்க முடியும் என்று யோசித்த பீம்சிங், தன் வாழ்நாளில் மீதமிருக்கும் நாட்களை தன்னுடைய சொந்த ஊரில் செலவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக அவர் ஜல்கான் பகுதிக்கு வந்து, அங்கிருந்த ஒரு ஓட்டலில் பாத்திரங்களை கழுவும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்காக அந்த ஓட்டலின் பின் பகுதியில் இருந்த ஒரு குடிசையிலேயே தங்கியிருக்கிறார்.

காவல் துறையினரிடம் சிக்கியது எப்படி?

உள்ளூர் காவல் துறையினர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்க முடியாமல் வைத்திருந்த வழக்குகளை கிரைம் பிரான்ச் அமைப்பிடம் ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அப்படி குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் பீம்சிங் பட்டேலின் வழக்கும் ஒன்று.

ஆமதாபாத் குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர் எஸ்.கே. சிசோடியா இந்த வழக்கு குறித்து கூறும்போது, “முதலில் இந்த வழக்கு எங்கள் கைகளுக்கு வந்தபோது, தொழில்நுட்பரீதியாக இந்த வழக்கை கையாள்வது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தோம். எனவே நாங்கள் எங்களது உளவுத்துறையை பயன்படுத்த முடிவு செய்தோம். இருந்தாலும் இந்த வழக்கு கடினமானதாகவே இருந்தது” என விவரிக்கிறார்.

பீம்சிங்கின் குழந்தைகள் அவர்களுடன் வசிக்கவில்லை என்பதால் அவர்களை தேடி சென்று விசாரிப்பது பெரிதாக பயனளிக்காது என்பதை புரிந்துகொண்டோம். எனவே நாங்கள் எங்களது விசாரணையை வித்தியாசனமான முறையில் துவங்கினோம் என்கிறார் சிசோடியா.

கொலை, மத்தியபிரதேஷ்

பட மூலாதாரம்,BHARGHAV PARIKH

படக்குறிப்பு,எஸ்.கே. சிசோடியா, காவல்துறை உதவி ஆய்வாளர்

இதுகுறித்து விரிவாக பேசத்துவங்கிய அவர், “ஜல்கன் சுற்று வட்டார பகுதிகளில் நாங்கள் பீம்சிங்கை தேடத்துவங்கினோம். அங்கு அவரது தூரத்து உறவினர் ஒருவரை சந்தித்தோம். அவர் பீம்சிங்கை ஜல்கன்னின் புல்கட் பகுதியில் பார்த்ததாக கூறினார்.

அதனை தொடர்ந்து நாங்கள் ஜல்கன் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஓட்டல்களில் விசாரிக்க துவங்கினோம். 68 வயது நிரம்பிய யாரேனும், முறையான சான்றுகளை வழங்காமல் ஓட்டல்களில் பணிபுரிந்து வருகிறாரா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டோம்.

ஆனால் பீம்சிங் புத்திசாலி. அவர் குறிப்பிட்ட ஓட்டலில் இருந்து எங்குமே செல்லவில்லை. பொதுபோக்குவரத்தை உபயோகிப்பதையும், மொபைல் போன் பயன்படுத்துவதையும் அவர் தவிர்த்து வந்திருக்கிறார். ஓட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருப்பதற்கு அவர் ஓட்டல் பின்புறத்தில் உள்ள இடத்தில் பாத்திரங்களை கழுவும் வேலையிலேயே எப்போதும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

பத்தாண்டுகளாக ஒரே இடத்தில் தங்கி வந்த பீம்சிங், கடைசியாக ஜல்கன் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தார். அப்போது அவருக்கு, ஒருவேளை தான் இறந்துவிட்டால் தன்னை யார் அடக்கம் செய்வார்கள் என்பது குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் அவர் ஒரு காகிதத்தில் தன்னுடைய முகவரியை எழுதி,சட்டை பாக்கெட்டில் வைத்துகொண்டு சுற்றியுள்ளார். அதுவே அவர் பிடிபடுவதற்கு காரணமானது” என்று கூறுகிறார் சிசோடியா.

உணர்ச்சிகரமான சூழலில் பீம்சிங் மேற்கொண்ட இப்படியான ஒரு செயல்தான் அவரை காவல் துறையிடம் காட்டி கொடுத்துள்ளது. பத்தாண்டுகளாக யாருடைய கண்களிலும் சிக்காமல் தப்பித்து வந்த பீம்சிங் தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.