Breaking News
அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களில் பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், அதில் செய்துள்ள முதலீடுகளின் நிலை என்ன என்பது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் – வணிகக் குழுமமான அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது.

அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதிலிருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவை எதிர்கொண்டன. இதையடுத்து, அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

எல்.ஐ.சி. குறித்த கேள்வியும் விளக்கமும்

குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய அமைப்புசார் முதலீட்டு நிறுவனமும், மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமுமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதானி குழுமத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது, அந்த முதலீடுகளின் நிலை என்ன என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பான ஒரு விளக்கத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியிட்டது.

“எல்ஐசி பொதுவாக தனது குறிப்பிட்ட முதலீடுகள் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால், அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ஊடகங்களிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் சில தகவல்கள் பரவிவருகின்றன. ஆகவே அதானி குழும நிறுவனங்களில் பங்குகளிலும் கடனாகவும் எந்த அளவுக்கு முதலீடுசெய்திருக்கிறோம் என்பதை  பகிர்ந்துகொள்கிறோம்.

அதானி குழும நிறுவனங்களில் பங்குகளாகவும் கடனாகவும் 35,917.31 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் அதானி குழும நிறுவன பங்குகள் 30,127 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாய்,” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

எல்.ஐ.சி.யை கடந்து போகும் பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானியில் செய்த முதலீடு எவ்வளவு

மேலும் இது பற்றி விளக்கியுள்ள எல்.ஐ.சி.,

“அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்டவை. எல்ஐசி வைத்துள்ள அதானி கடன் பத்திரங்களின் தர மதிப்பீடு AA என்ற அளவிலோ அல்லது அதற்கு மேலேயோதான் இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான IRDAI நிர்ணியித்த விதிகளுக்கு உட்பட்ட தர மதிப்பீடு இது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசி ஒட்டுமொத்தமாக 41.66 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்துவருகிறது. அதில், அதானி குழுமத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 0.975% மட்டுமே,” என்று தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி. பில்டிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“முதலீடு செய்துள்ள சொத்துகளின் சந்தை மதிப்பு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், எல்ஐசி நீண்டகால நோக்கில்தான் முதலீடுகளைச் செய்கிறது. எல்ஐசி வாரியமும் அதன் நிர்வாகமும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரது நலனையும் பாதுகாக்கும் வகையில் எப்போதும் செயல்படும்” என எல்ஐசியின் அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.