Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா?

0

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண்  7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்’ அங்கீகரித்துள்ளது. 

ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு தாய்ப்பாலை தானம் செய்ய அவரால் எப்படி முடிந்தது? இவ்வளவு அதிகளவில் தாய்ப்பால் தானம் செய்யலாமா? தானம் செய்யப்படும் தாய்ப்பால் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் என்ன?

விரிவாகப் பார்ப்போம்.

ஸ்ரீவித்யா ‘ஹைப்பர் லேக்டேடிங்’ (Hyper lactating condition) என்று சொல்லப்படும் அதிகமாகப் பால் சுரக்கும் நிலை கொண்ட தாயாக இருந்தார். இதனால் அவர் தனது குழந்தைக்கு கொடுத்தது போக, மீதம் சுரந்த பாலை சேகரித்து தானமாக கொடுத்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை அரசு மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை, ஸ்ரீவித்யா தனக்கு தினமும் அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலைச் சேகரித்து, தன்னார்வலர்கள் மூலமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கொடையாக அளித்துள்ளார். இரண்டாவது முறை கருவுற்ற சமயத்தில், தாய்ப்பால் தானம் குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீவித்யா, தனது குடும்பத்தினர் ஒப்புதலுடன் தானம் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்.

என்ன சொல்கிறார் ஸ்ரீவித்யா?

”என்னுடைய குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர், நான் மெஷின் வைத்து பம்ப் செய்து அதிகமாகச் சுரந்த பாலை சேகரித்தேன். அதிகமாக சுரக்கும் தாய்ப் பாலை குழந்தைக்கு புகட்டாமல் இருப்பது தவறு என்றும் அவ்வப்போது வெளியேற்றினால்தான் மீண்டும் பால் சுரக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

அதுவே தாய்ப்பாலை தானம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் அளித்தது. நான் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன், என் பெற்றோர் மற்றும் கணவர் உதவியால்தான் நான் தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்தேன். என் குடும்பத்தார் அளித்த ஊக்கம்தான் எனக்கு உதவியது,” என்கிறார் அவர். அதிகமாக சுரக்கும் பாலை எப்படி எடுப்பது, சேகரிப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் பலமுறை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறுகிறார் ஸ்ரீவித்யா.

தாய்ப்பால்

பட மூலாதாரம்,SRIVIDYA

ஹைப்பர் லேக்டேட்டிங் நிலை என்பது என்ன?

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியைக் கண்காணிக்கும் மருத்துவர் செந்தில் குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, `ஸ்ரீவித்யா ‘ஹைப்பர் லேக்டேடிங்’ என்ற நிலையைக் கொண்டுள்ள தாயாக இருப்பதால், ஏழு மாதங்களில் 100 லிட்டருக்கு மேற்பட்ட பாலை அவரால் தானம் செய்ய முடிந்தது` என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது ”ஒரு சில தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரக்கும். அவர்களால் அதை தடுக்கமுடியாது. ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மிகவும் குறைவாக இருக்கும். இதில் ஸ்ரீவித்யா முதல் வகையைச் சேர்ந்தவர் என்பதால் தானம் கொடுக்க முடிந்தது.

இதை எல்லா தாய்மார்களிடமும் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை இரண்டு முறை ‘பாக்டீரியா கல்ச்சர் சோதனை` உள்ளிட்ட பலவிதமான அறிவியல் ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர்தான் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தருவோம் ” என்று தெரிவித்தார்.

ஸ்ரீவித்யா ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்துள்ளதற்கான தரவுகள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவற்றை இரண்டு முறை ஆய்வு செய்த பின்னர்தான் ‘ஏசியா புக் ஆப் ரெகார்டஸ்’ நிறுவனத்திற்கு ஸ்ரீவித்யாவின் தானம் பற்றிய சான்று வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 100 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தது போக, மற்ற நேரங்களில் சுரக்கும் பாலை அரசு தாய்ப்பால் வங்கியில் செலுத்துவதாக கூறுகிறார் அவர். ஆனால் ஸ்ரீவித்யாவைப் போல தொடர்ந்து தானம் கொடுக்கும் தாய்மார்கள் மிகவும் குறைவு என்கிறார்.

இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு நேரத்தில் 400 லிட்டர் வரை இருப்பு வைக்கிறோம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாய்மார்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனையில் உள்ளவர்களும் இந்த வங்கியில் தாய்ப்பாலை தானமாக செலுத்தும் வசதி உள்ளது என்று கூறினார் செந்தில்குமார்.

தாய்ப்பால் தானம்

பட மூலாதாரம்,SRIVIDYA

சாதனைக்காக செய்தாரா?

ஸ்ரீவித்யா மிக அதிக அளவில் தாய்ப்பால் தானம் செய்துள்ளது பிறரை ஊக்குவித்தாலும், சாதனை செய்வதற்காக அவர் தாய்ப்பாலை தானம் கொடுக்க முன்வந்தாரா என்ற கேள்வியும், அவரது உடல்நலன் மற்றும் அவரது குழந்தையின் உடல்நலன் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆனால், தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும்தான் இந்த தானத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவித்யா நம்மிடம் தெரிவித்தார்.

வல்லுநர்கள் கருத்து என்ன?

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிர்மலா ஒரு தாய்ப்பால் ஆலோசகர் (lactation consultant). தாய்ப்பால் சுரப்பு, தாய் பாலூட்டும் முறைகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகள் குறித்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார் இவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், பால் சுரக்காத நிலையில் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தானம் செய்யப்படும் தாய்ப்பால் உயிர் காக்கும் பொருளாக உள்ளதால் ஸ்ரீவித்யாவின் செயலில் தவறில்லை என்று கருதுகிறார் அவர்.

”ஸ்ரீவித்யா தனது குழந்தைக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பாலை தானமாக கொடுக்கிறார் என்பதால், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவரது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

‘ஹைப்பர் லேக்டேடிங்’ என்ற நிலையில் சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமான பால் சுரப்பு இருக்கும். அதனை நல்ல முறையில், தானம் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற அவர் உதவுகிறார் என்பதை வரவேற்கலாம். இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு,” என்கிறார் நிர்மலா.

தாய்ப்பால் குறித்த மூடநம்பிக்கைகள்

சக்தி பிரியா

பட மூலாதாரம்,SAKTHIPRIYA

படக்குறிப்பு,தாய்ப்பால் ஆலோசகர் ‘சக்தி’ பிரியா

திருவள்ளூரில் பணிபுரியும் மற்றொரு தாய்ப்பால் ஆலோசகரான சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த சில மூடநம்பிக்கைகள் தற்போதும் சமூகத்தில் நிலவுவதாக சொல்கிறார்.

”பிறந்த குழந்தைக்கு தாயின் பாலை மட்டும்தான் தரவேண்டும். அதற்கான வாய்ப்பில்லை என்னும்போது, இதுபோல தானமாகக் கிடைக்கும் தாய்ப் பாலை அந்த குழந்தைக்கு தருவதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

பலர்  இதை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிரமப்படுவார்கள். தானமாக கிடைக்கும் பாலை குழந்தைக்குத் தருவது குறித்து பல விதமான சந்தேகங்களுடன் எங்களிடம் பெற்றோர்கள் வருவார்கள்,” என்று கூறிய அவர் பெற்றோருக்கு வரும் சில சந்தேகங்களைப் பட்டியலிட்டார்.

அவர் பட்டியலிட்ட அனுபவங்கள்:

1) சமீபத்தில் ஒரு பெற்றோர், பாலை தானமாகக் கொடுத்த நபரின் சாதி என்ன என்று அறிய முற்பட்டார்கள், அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஒருவேளை தானம் கொடுத்த பெண் சாதிப் படிநிலையில் தங்களது சாதியைவிட கீழே இருந்தால் அவரிடம் இருந்து பெற்ற பாலை எப்படி கொடுப்பது என்று அவர்கள் யோசித்தனர்.   2) ஒரு சிலர், தங்களது குழந்தைக்கு ஏதாவது நோய் வருமா என்று கேட்பார்கள். தானமாகப் பெற்ற பாலை கொடுப்பதால், பாலை வழங்கிய தாய்க்கு இருக்கக்கூடும் சாத்தியமான பாதிப்புகள் தங்களது குழந்தையையும் தாக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். 3) சில தாய்மார்களுக்கு தொடக்கத்தில் பால் சுரப்பு இருக்காது, சில நாட்களில் சுரப்பு தொடங்கிவிடும் என்பதால், சில நாட்களுக்கு தானமாக பெறப்பட்ட பாலை கொடுக்கவேண்டும். அதனால், தன்னுடைய குழந்தை தன்னிடம் குடிக்க மறுத்துவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதைப் பார்த்துள்ளேன்.

தாய்ப்பால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவ்வளவு தாய்ப்பால் தானம் செய்யலாமா?

தாய்ப்பால் குறித்த கட்டுக்கதைகள் சமூகத்தில் தொடர்வதாகக் குறிப்பிட்ட சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வுதான் இதற்குத் தீர்வு என்கிறார்.

இப்படி அசாதாரணமான அளவில் தாய்ப்பால் தானம் செய்வது தாயின் உடலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சக்தி பிரியாவிடம் கேட்டோம்.

“தன் குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் கிடைக்கும் பாலை தானம் செய்வதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். பால் சுரப்பது எப்படி செயல்படுகிறது என்றால், உங்கள் குழந்தை அதிகமாக குடிக்கத் தொடங்கும்போது அதற்கு ஏற்றபடி தாயின் உடல் அதிகம் சுரக்கத் தொடங்கும்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பால் சுரப்பது இயல்பாக குறையும்.

தானம் செய்யவேண்டும் என்பதற்காக ஒருவர் அபரிமிதமாக பம்ப் செய்தால் அதற்கு ஏற்ப பாலும் அதிக அளவில் சுரக்கத் தொடங்கும். இதனால் பால்சுரப்பது தாமாக மட்டுப்படும் நடைமுறை தாமதமாகும். அபரிமிதமாக சுரக்கும் பால் தாய்க்கு சில நேரங்களில் சுமையாக மாறக்கூடும்,” என்றார். மேலும் இது பற்றிப் பேசிய சக்தி பிரியா, “ஸ்ரீவித்யா இப்படி அபரிமிதமாக தாய்ப்பால் தானம் செய்திருப்பது தாய்ப்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு உதவியாக இருந்திருக்கும். அவர் இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார் என்றால், தாய்ப்பால் தானம் செய்யவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வாக மட்டுமே இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்,” என்கிறார்.

“இவ்வளவு அதிகமாக ஒருவரே தானம் செய்யலாம் என்பதற்கான செய்தியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறைய பேர் தாய்ப் பால் தானம் செய்யவேண்டும். ஒருவரே இவ்வளவு நிறைய செய்வது தேவையற்றது. செய்கிறவருக்கு சிரமங்களைத் தரக்கூடியது.

ஆனால், இந்த தாய்ப்பாலை தானமாகப் பெறும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறார் சக்திபிரியா.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.