Latest News
ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி - 15 பேருக்கு சிகிச்சைஇரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.! அதிமுக தலைமை அறிவிப்பு

அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் – எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?

0

      உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது.

 இந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது, இதற்கு அதானி குழுமம் கூறும் பதில் என்ன, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்தா, எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகளுக்கும், எல்.ஐ.சி.க்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை.

 சுருக்கமாகச் சொல்வது என்றால் அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க்.

 இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

 அதானி நிறுவனங்களுக்கு “கணிசமான கடன்” இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம் ஹிண்டர்பர்க் அறிக்கைக்கு கூறும் பதில் என்ன?

இந்த அறிக்கையை நிராகரித்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

 88 ஹிண்டன்பர்க் கேள்விகளில் 21 கேள்விகள் ஏற்கனவே பொதுத் தளத்தில் உள்ளவை என்று அதானி குழுமம் கூறுகிறது.

 ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயாரித்திருப்பதாகக் கூறுவது தவறு என்றும், 2015 முதல் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்றும் அதானி நிறுவனம் கூறுகிறது.

 இந்த அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் குற்றச்சாட்டுக்கு ஹிண்டன்பர்க் கூறும் பதில் என்ன?

“ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை.’’ என்று கூறியிருக்கிறது ஹிண்டன்பர்க்.

  நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கிறோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்” என்று சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்திருக்கிறது ஹிண்டன்பர்க்.

ஹிண்டன்பர்க் என்பது என்ன? அது என்ன செய்கிறது?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இயங்குகிறது ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம்.

உண்மையில், அந்நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லர் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும்.

பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதை குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள்.

முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.

பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.

 தன் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது.

 ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு என்ன பாதிப்பு?

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டே நாட்களில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களின் பங்குகளும் சரமாரியாக சரிந்துள்ளன.

 குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளும் 20 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளன. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 18.5 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளன.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தில் அடங்கிய 7 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு சுமார் 3.92 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் ஒட்டுமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது சுமார் ரூ. 4.2 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பை இழந்துள்ளது.

பணக்காரர் பட்டியலில் அதானி சரிந்தது ஏன்?

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவு அதன் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 7.87 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

 இரண்டே நாட்களில் அவரது சொத்து மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையிலும் ஏழாவது இடத்திற்கு கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரிவைத் தடுக்க அதானி குழுமம் எடுத்த நடவடிக்கை பலன் தந்ததா?

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் திரட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டில் இறங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட கடுமையான சரிவு இங்கும் எதிரொலித்தது.

 அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் எதிர்பார்த்தபடி அந்த நாள் அமையவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட, முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்யப்பட்டதாக மும்பை பங்குச்சந்தை இணையதள தரவுகள் கூறுகின்றன.

எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன?

 “இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது,” என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா ஆகியோர் இதுபற்றி கவலை வெளியிட்டுள்ளார்கள்.

எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ.யில் மக்களின் சேமிப்புப் பணம் என்னவாகும்?

இதுபற்றிய உறுதியான கருத்தைக் கூறுவதை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் தவிர்க்கிறார்கள்.

 அதே நேரத்தில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ்குமார் காரா விளக்கம் அளித்துள்ளார். “அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

 ஆனாலும், இந்த பங்குச்சந்தை நிகழ்வுகள் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.300 கோடி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ரூ.125 கோடி என்ற அளவில் அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால், எல்.ஐ.சி. நிறுவனம் இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி. வசமுள்ள அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அந்த அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?
படக்குறிப்பு,பங்குச்சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன்

பங்குச்சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது குறித்து பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் பேசிய போது, “எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் அளவில் மிகப்பெரியவை. அதனுடன் ஒப்பிடுகையில், அதானி குழுமத்தில் அவற்றின் முதலீடு என்பது சிறிய அளவுதான். “ என்று கூறியிருக்கிறார்.

 பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளால் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒருவேளை நஷ்டத்தை சந்தித்தாலும், அவை அந்நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்காது என்றே கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் எதிர்காலம் என்னவாகும்?

அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அதில் முதலீடு செய்ய பெரு முதலீட்டாளர்களிடையே தயக்கம் நிலவும் என்று சோம வள்ளியப்பன் கூறுகிறார்.  ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மையா? இல்லையா? என்பதைக் காட்டிலும் அதன் அடிப்படையில் செபி அமைப்போ, இந்திய ரிசர்வ் வங்கியோ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே மிகவும் முக்கியம்.  அதைப் பொறுத்தே அதானி குழுமம் மற்றும் அதன் பங்குகளின் எதிர்காலம் அமையும் என்கிறார் சோம வள்ளியப்பன்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.