Breaking News

சென்னை: பழைய பென்ஷன் திட்டம், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வருகிற 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாளை முதல் 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10 லட்சம் அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வங்கி ஊழியர், அலுவலர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். தற்போது 2, 4வது சனிக்கிழமைகள் விடுமுறை நாளாக உள்ளது.

எனவே மாதத்தில் முதல் மற்றும் 3வது ஆகிய சனிக்கிழமைகளும் விடுமுறை அளித்தால் 5 நாட்கள் வேலை திட்டம் அமலுக்கு வந்து விடும். இதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் வார நாட்களில் பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று கொண்ட பின்னரும், 5 நாட்கள் வேலை திட்டம் அமலுக்கு வரவில்லை. இதுபோல 93ம் ஆண்டு வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பென்ஷன் விகிதத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வங்கி அலுவலர், ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.11.2022 முதல் அமலாக வேண்டிய 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

வங்கி ஊழியர், அலுவலர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வருகிற 30, 31 ஆகிய நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே நேற்று (26ம் ேததி) குடியரசு தினம் என்பதால் வங்கிகள் செயல்படவில்லை. இன்று (27ம் தேதி) வெள்ளிக்கிழமை மட்டுமே வங்கிகள் செயல்படும். நாளை (28ம் தேதி) 4வது சனிக்கிழமை, அடுத்து 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் விடுமுறையாகும். அதைத் தொடர்ந்து 30ம் தேதி திங்கள்கிழமை, 31ம் தேதி செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நாடு முழுவதும் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி பணிகள், சேவைகள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாத கடைசி நாட்கள் என்பதால் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பட்டுவாடா பணியும் பாதிக்கும். ஏடிஎம் சேவைகளும் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர ஒருங்கிணைந்த வங்கி ஊழியர், அதிகாரிகள் கூட்டமைப்பு, இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றுடன் மத்திய தொழிலாளர் ஆணையம் இன்று மும்பையில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.