Breaking News
குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்து பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு: ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 9 பேர் கைது; இதுவரை 177 பேர் மீட்பு

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 2வது நாளாக நேற்று மேற்கொள்ள மீட்பு பணிகளைத் தொடர்ந்து இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பாலத்தை சீரமைத்த ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 9 ஊழியர்களை கைது செய்துள்ளனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள மோர்பி நகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது. மச்சு ஆற்றின் குறுக்கே கேபிள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.

கடந்த சில மாதங்களாக நடந்த இப்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிந்து, 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வார விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் தொங்கு பாலத்தை காண வந்தனர். மாலை 6.30 மணி அளவில் பாலத்தில் சுமார் 500 பேர் வரை நின்றிருந்த நிலையில், திடீரென பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தில் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்து மூழ்கினர். சிலர் அறுந்த பாலத்தை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியபடி கதறினர். உடனடியாக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு படையினர் படகுகள் மூலமாக ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக இருந்த நிலையில், நேற்று காலை பலி 130 ஆக அதிகரித்தது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இரவு முழுவதும் மோர்பியில் தங்கியிருந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஐந்து குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் ஆறு பிரிவுகள், விமானப் படையின் ஒரு குழு, ராணுவத்தின் இரண்டு குழுவினர் மற்றும் கடற்படையின் இரண்டு குழுக்கள் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலைக்குப் பிறகு 2ம் நாள் மீட்பு பணி நிறைவடைந்தது. இதுவரை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். 3வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும், மாநில போலீசார் விபத்து தொடர்பாக, பாலத்தை சீரமைத்த குஜராத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவன ஒரேவாவின் மேலாளர், காவலாளி, டிக்கெட் விநியோகிப்பவர் என 9 பேரை கைது செய்துள்ளனர். அஜாக்கிரதையாக பணி மேற்கொள்தல், பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘பாலத்தின் பராமரிப்பு பணிக்கு பிறகு உள்ளாட்சி நிர்வாகத்திடம் தகுதிச் சான்றிதழ் பெறாமலேயே பாலத்தை திறந்துள்ளனர். பராமரிப்பு பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இந்த பாலம் அதிகபட்சம் 125 பேரை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது. ஆனால், பராமரிப்பு பணி செய்யும் ஒரேவா எனும் தனியார் நிறுவனம் 500 பேர் வரையிலும் டிக்கெட் விநியோகித்துள்ளது. பொறுப்பில்லாமல் அதிக பார்வையைாளர்களை அனுமதித்ததும் விபத்திற்கு காரணம்’’ என்றனர்.

அதே சமயம் ஒப்பந்த நிறுவனமான ஒரேவா அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலத்தின் பராமரிப்பு பணி 100 சதவீதம் முறையாக செய்யப்பட்டுள்ளது’’ என்றனர். 15 ஆண்டுகள் பாலத்தின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள இந்நிறுவனம் சுமார் 6 மாதங்கள் வரை பராமரிப்பு பணியை செய்த நிலையில், மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவலே தெரிவிக்காமல் பாலத்தை திறந்து, பொதுமக்களை பார்வையிட அனுமதித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மனிதத்தவறால்தான் 134 உயிர்கள் பலியானதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், மோர்பி பாலம் விபத்திற்கு ஆளும் பாஜ அரசே முழு பொறுப்பேற்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பாலம் அறுந்து விழும் முன்பாக எடுக்கப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

* விபத்தில் பலியானவர்களில் 47 பேர் குழந்தைகள். இதில் 2 வயது குழந்தையும் பலியாகி உள்ளது.
* அதிகப்படியான மக்கள் பாலத்தில் இருந்ததால், கேபிள்கள் அறுந்து உடைந்ததாக தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
* பாலத்தை பார்க்க வந்த சில இளைஞர்கள், பாலத்தில் குதித்ததாலும், அதை அசைத்து விளையாடி, சேதப்படுத்தியதாலும் தான் பாலம் இடிந்ததாகவும் இல்லாவிட்டால் 15 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் என்றும் ஒப்பந்த நிறுவனமான ஒரேவாவின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பால் படேல் கூறி உள்ளார்.

* பிரதமர் இன்று நேரில் ஆய்வு
குஜராத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி 2 நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் அவர் இன்று மோர்பி நகருக்கு சென்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட உள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

* நீதி விசாரணை தேவை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,  டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘மோர்பி பாலம் விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அதனை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்கட்டும். 5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட பாலம் அறுந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவேண்டும். ஏன் ஏராளமான மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும்’’ என்றார்.

* எம்பி உறவினர்கள் 12 பேர் பலி
ராஜ்கோட் மக்களவை எம்பி மோகன் குந்தாரியா. இவரது உறவினர்கள் 12 பேர் மோர்பி பாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்ததில் 12 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து எம்பி மோகன் குந்தாரியா கூறுகையில், ‘‘எனது குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள், 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பல்ப், கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம்
மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஒரேவா குழுமம் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பல்ப், கடிகாரங்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம் எப்படி மோர்பி பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றது என தெரியவில்லை. மோர்பி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக 7 மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. புனரமைப்பு பணிகளுக்கு பின், குஜராத்தி புத்தாண்டையொட்டி அக்டோபர் 26ம் தேதி பாலம் திறக்கப்பட்டது.

* 43 ஆண்டுக்கு முன் 25,000 பேர் பலி
குஜராத், மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள தொங்கு பாலம்  நேற்று முன்தினம் அறுந்து விழுந்து பலரை காவு வாங்கியது.  இதனால் மச்சு ஆறு பற்றி அனைவருக்கும் தெரியவந்தது. ஆனால், 43 ஆண்டுகளுக்கு முன் மச்சு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத்தில் ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்தது. ஆகஸ்ட் 11ம் தேதி மச்சு  அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதில் தொழில்நகரான மோர்பி மற்றும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வரலாற்றில் இதுவரை நடந்திராத வெள்ள பெருக்கால் 1,800 முதல் 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்று 2011ம் ஆண்டு வெளியான யாருக்கும் பேச நாக்கு இல்லை  என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தப்பியவர்கள் பேட்டி
விபத்தில் உயிர் தப்பி காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அஷ்வின் மெஹ்ரா என்பவர் கூறுகையில், ‘‘பாலத்தின் கயிற்றை இளைஞர்கள், சிறுவர்கள் என சுமார் 20 பேர் வரை பிடித்து இழுத்தும், ஆட்டியபடியும் இருந்தனர். பாலம் அறுந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்தது. பாலம் அறுந்ததும் அருகே இருந்த மரக்கிளைகளை பற்றி பிடித்து கொண்டேன். அதனால், தப்பி விட்டேன்’’ என்றார். அகமதாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கூறுகையில், ‘‘நாங்கள் பாலத்தை பார்க்க சென்ற போது அதிக கூட்டம் இருந்தது. அதனால் பாலத்தை பார்க்காமல் திரும்பிவிட்டோம். ஏன் இவ்வளவு அதிக கூட்டத்தை அனுமதிக்கிறீர்கள் என டிக்கெட் தருபவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் ‘நாங்கள் என்ன செய்ய முடியும்’ என அலட்சியமாக பதில் அளித்தனர்’’ என்றனர்.

* உலக தலைவர்கள் இரங்கல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா ஆகியோர் மோர்பி விபத்து சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.