Breaking News
மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை – சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு .

புதுடெல்லி,

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 13-ந்தேதி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மாணவியின் பெற்றோர் ஏற்கவில்லை. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்கள் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக வெடித்தது. பள்ளி வளாகமே சூறையாடப்பட்டது. இதற்கிடையில், “தன் மகள் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதில் எங்கள் தரப்பு டாக்டரையும் இடம்பெற செய்ய வேண்டும்” என்று மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று காலையில் உத்தரவு பிறப்பித்தார். அதில், மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் மனுதாரர் தரப்பு டாக்டர்கள் இடம்பெறவில்லை என்பதால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த அப்பீல் வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு ராமலிங்கம் தரப்பு வக்கீல் சங்கர்சுப்பு முறையிட்டார்.

ஆனால், இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்தான் அப்பீல் செய்ய வேண்டும். ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்ய முடியாது என்று கூறினர். இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தரப்பு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்றும், மறு உரற்கூறாய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாகவும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும் ஏன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தீர்கள்? ஐகோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லையா? சுப்ரீம்கோர்ட்டு அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.