Breaking News
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள் தீவிரமாக கண்காணிப்பு

ஈரோடு:

கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், பவானி, பவானி கூடுதுறை, கொடுமுடி ஆகிய பகுதிகளை ஒட்டி காவிரி ஆறு பாய்கிறது.

தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதையும் படியுங்கள்: கடமலைக்குண்டு அருகே ரூ.15 லட்சத்தில் தந்தைக்கு சிலை வடித்த மகன்கள்- தாயின் ஆசையை நிறைவேற்றினர் காவிரி ஆற்றில் வழக்கமாக ஏராளமான வாலிபர்கள் குளித்து மகிழ்வார்கள். தற்போது அதிக அளவில் தண்ணீர் வருவதால் யாரையும் காவிரி ஆற்றில் இறங்க விடாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்க்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பவானி கூடுதுறைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

குறிப்பாக ஆடி மாதம் முழுவதும் புது மண தம்பதிகள் புனித நீராட வருவார்கள். இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் படித்துறை அனைத்தும் மூழ்கி விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் படித்துறைக்கு செல்லும் நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் காவிரி கரையோரத்தை பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.