Breaking News
கோடைக்கு குளுகுளு தரும் நுங்கு

நன்றி குங்குமம் தோழி

கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.

* நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

* கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

* வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு நல்ல தீர்வு.

*  உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு எவ்வளவு தண்ணீர் பருகினாலும் தாகம் அடங்காது. ஆனால் நுங்கை சாப்பிட்டவுடன் அந்த தாகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும். ரத்த சோகைக்காரர்கள் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகும். உடலும் சுறுசுறுப்பு அடையும்.

* நுங்கில் உள்ள ஆந்த்யூசைன் என்ற ரசாயனப்பொருள் பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது.

* கோடையில் தோன்றும் அம்மை நோய் வராமல் பாதுகாக்கிறது.

* நுங்கை அரைத்து தேங்காய்ப்பாலுடன் சேர்த்து குடித்தால் வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.

* நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகளின் மேல் பூசினால் விரைவில் சரியாகும்.

* இளநீருடன் நுங்கை சேர்த்து ஜூஸாக செய்து குடிக்கலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். உடல் பொலிவடையும்.

* நுங்கை உடைத்து கால் டம்ளர் நுங்கு நீரில் ஒரு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சர்க்கரையுடன் சர்பத்தாக அருந்தலாம்.

* நுங்கின் மேலுள்ள பழுப்பு நிறமான தோலில்தான் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதைச் சேர்த்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

* களைப்பாக உள்ள நேரத்தில் நுங்கு சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும்.

* நுங்கை வெட்டி துண்டுகள் செய்து தேனை சேர்த்து, பச்சை திராட்சையை கலந்து சாப்பிட சுவையே தனிதான்.

தொகுப்பு – ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.