Breaking News
பிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். அவரை விமான நிலைத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

ராஜாஜி அரங்கத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி அங்கு கருணாநிதி உடலுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .
ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.